Thursday, August 21, 2014

செப்டம்பர் மாதத்தை பகுத்தறிவு மாதமாக கொண்டாடுவோம்.

தமிழ்நாட்டிலுள்ளவர்களைவிட வெளிநாட்டில் வாழும் தமிழர் அதிகம் மூடநம்பிக்கைகளுடன் இருப்பதாக எனக்குப் படுகிறது. எனக்கு மட்டும்தான் இப்படி தெரிகிறதா என்று புரியவில்லை.

ஜோசியர்களுக்கும், வாஸ்து பார்ப்போருக்கும், சாமியார்களுக்கும் வெளிநாட்டில் வசிக்கும் தமிழரிடையே நல்ல வரவேற்பு(மற்றும் வசூல்) இருப்பதாக தெரிகிறது.

மீண்டும் சாதிப் பெயர்களை பெயருக்கு பின் போட்டுக்கொள்வதும் தமிழரிடையே அதிகரித்துள்ளது. இந்த சாதிப் பெயர் நீக்கும் சமூகப் புரட்சியை தமிழகத்தில் பல போராட்டங்களை நடத்தி சாதித்தோம் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.

பெரியாரின் பகுத்தறிவு கருத்துக்களை தமிழரிடையே குறிப்பாக, வெளிநாட்டு தமிழரிடையே தொடர்ந்து பரப்பவேண்டிய அவசியம் இருக்கிறது.
பெரியார் பிறந்த செப்டம்பர் மாதத்தை பகுத்தறிவு மாதமாக கொண்டாடினால் என்ன?

செப்டம்பர் மாதம் முழுதும் சமூக இணையத்தளங்கள் வழியாகவும், மற்ற நிகழ்ச்சிகள் வழியாகவும் தமிழர் அனைவரும் பகுத்தறிவு கருத்துக்களை பற்றி விவாதிக்கலாமா?

இந்த கொண்டாட்டத்தின் நோக்கம் பெரியாரின் கருத்துக்களை தினிப்பது அல்ல. பெரியாரே அவர் சொல்வதை அப்படியே ஏற்றுக்கொள்ள சொல்லவில்லை.

பெரியார் என்றாலே இறை மறுப்பாளர் என்ற கருத்தை மட்டும் புரிந்துகொண்டுள்ளோர்தான் அதிகம். ஆனால் சாதி ஒழிப்பு, சமத்துவம், பெண் விடுதலை, பகுத்தறிவு, சுயமரியாதை, தமிழ் உணர்வு போன்ற பல முற்போக்கு விசயங்களுக்காக போராடியவர் பெரியார்.

 இங்கு வெளிநாடுகளில் பெரியார் பற்றியும் , திராவிட இயக்கத்தைப் பற்றியும் தெரியாமலே ஒரு தலைமுறை உருவாகிவருகிறது. பெரியார் என்ற ஒரு மாமனிதர் வாழ்ந்தார், அவரின் கொள்கைகள் இவை, அவர் உழைப்பால் தமிழ் சமூகத்து இந்த நன்மைகள்(அல்லது தீமை) வந்தது என்றாவது, வெளிநாடுகளில் வாழும் நம் அடுத்த தலைமுறைக்கு சொல்லவேண்டிய கட்டாயம் நமக்கு இருக்கிறது.

இதை ஒரு அறிவுப்பூர்வமான விவாதமாக செய்வோம். ஆத்திகர்களும், மத ஆதரவாளர்களும் தங்கள் பிரச்சாரங்களை தங்கு தடையின்றி செய்யும்போது, நாம் கொஞ்சம் பகுத்தறிவு கொள்கைகளையும் சொல்லிவைப்போமே!

மக்கள் அவர்கள் அறிவுக்கும் அனுபவத்திற்கும் சரி என்று படுவதை ஏற்றுக்கொள்ளட்டும். இல்லை என்றால் விட்டுவிடட்டும்.


No comments:

Post a Comment